காஞ்சியில் தார்ப்பாய் மூடாத லாரிகள் வாகன ஓட்டிகள் 'திக். திக்'
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா சிறுதாமூர், அருங்குன்றம், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் கல் குவாரிகள், கிரஷர்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு உடைக்கப்படும் ஜல்லிகள், எம்.சாண்ட் ஆகியவை வீடுகள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு லாரி, டிராக்டர் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் ஏற்றி செல்லும் ஜல்லிக் கற்கள் மீது தார்ப்பாய் மூடாமல் இருப்பதால், ஜல்லிகள் சாலையில் சிதறி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல், எம்.சாண்ட், மண் ஆகியவை லாரிகளில் திறந்தநிலையில் கொண்டு செல்லும்போது, காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களைப் பதம்பார்க்கிறது. மேலும், தார்ப்பாய் மூடாமல் கட்டுமானப் பொருட்களை, அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்காமல், துறை அதிகாரிகள் மெத்தனமாக இருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் கட்டுமானப் பொருட்களை, திறந்தநிலையில் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.