மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உழவடை செய்யவும், நாற்றாங்கால் சீர்த்திருத்தம் செய்யவும், மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 20. 09. 2024 முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு விநாடிக்கு 20 கன அடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 70 கன அடியும் ஆக மொத்தம் 90 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்கால் மூலம் புன்செய் நிலங்களுக்கு 20. 09. 2024 முதல் 04. 11. 2024 வரை மொத்தம் 46 நாட்களில் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பும், 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்தும் மொத்தம் 74. 649 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை மற்றும் புஞ்சைத்துறையம்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.