பால் நிறுவனத்தின் பொருள்கள் விற்பனை கண்காணிப்பு
திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனத்தின் உணவுப் பொருள்கள் உள்ளூா் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பதியில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய்யில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக தகவல் வெளியானது. லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், மத்திய உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்தனா். சா்ச்சையில் சிக்கிய நெய், கா்நாடக மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்து, திருப்திக்கு திண்டுக்கல் நிறுவனம் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களான பால், தயிா், வெண்ணை, பன்னீா், நெய் உள்ளிட்டவை உள்ளூா் சந்தையில் விற்பனை செய்யப்படுவது குறித்து தீவிரமாக கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.