பாலக்கோடு: போதைப் பொருட்களுக்கு எதிராக மாரத்தான் போட்டி
தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தர்மபுரியில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி. என். சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி கவர்னர் சிவக்குமார், துணை கவர்னர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் வரவேற்றார். இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.