தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அகரம் கிராமத்தைச் சார்ந்த பழனி மகன் வரதராஜ பெருமாள் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்று சொந்த வேலையின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது திப்பம்பட்டியில் இருந்து காரிமங்கலம் செல்லும் வழியில் தவறி கீழே விழுந்துள்ளார் இதில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். அப்பொழுது அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அப்பொழுது வரதராஜ பெருமாளுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதில் மூளை செயல் இழந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து வரதராஜ பெருமாள் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து நேற்று மாலை மூளை சாவு அடைந்த வரதராஜ பெருமாளின் உடல் உறுப்புகளை மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர் இதனைத் தொடர்ந்து உடல் உறுப்புகள் தானம் செய்த வரதராஜ பெருமாள் உடலுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் நீண்ட வரிசையில் நின்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதால் தமிழக அரசு உத்தரவுப்படி வரதராஜ பெருமாளின் உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.