கோவை: தனியார் பேருந்து மோதி விபத்து; பரபரப்பு வீடியோ
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு தினசரி பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமல் ஓட்டப்படுவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு சென்ற தாமரை என்ற தனியார் பேருந்து, ஹவுசிங் யூனிட் பகுதியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவரது வலது காலில் ஏறி இறங்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காயமடைந்தவரை பார்த்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பாமல் சாலையோரம் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்தவர் முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த CCTV கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.