மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரபுரம் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை. அதனால் அன்னூர் சாலையில் கட்டியுள்ள சுகாதார வளாகத்தை மகளிர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சுகாதார வளாகம் கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலானதால் பழுதடைந்து இருந்தது. ஊராட்சியின் சார்பில், ரூ. 1 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில், சுகாதார வளாகம்சீரமைக்கப்பட்டது. மேலும் இரவில் இந்த வளாகத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக, மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்து பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி சிறுவர், சிறுமியர் குமரபுரத்தின் தெற்கு பகுதியில் உள்ள, காலி இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுகாதார வளாகம் திறக்காததால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா கூறுகையில், குமரபுரத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், பழுது பார்த்து சீர் செய்யப்பட்டது. இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாளில் சுகாதார வளாகம் திறக்கப்படும், என்றார்.