சிவகாசி - Sivakasi

விருதுநகர்: தொழிலாளி வெட்டி படுகொலை; தந்தை, 2 மகன்கள் கைது...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை செய்த வழக்கில் மீன் வியாபாரி மற்றும் அவரது இரு மகன்களை போலீஸார் கைது செய்தனர். சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(39). இவரது மனைவி மாரியம்மாள். கணவர் ராஜசேகர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த மீன் வியாபாரி விநாயகமூர்த்தி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராஜசேகருக்கும், விநாயகமூர்த்தி குடும்பத்திற்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் வைரப்பிரகாசம், விக்ரம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வெட்டியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்கு போலீஸார் ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தி(53), அவரது இரண்டு மகன்கள் வைரப்பிரகாசம்(26), விக்ரம்(23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்