திருவண்ணாமலை: மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அம்மாபாளையம், தானகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளான மதுமிதா, ஜெகநாதன், சிலம்பரசன், அபிநயா, லித்திகா, ஹரிகரன், ஜமுனா, சற்குணநாதன் மற்றும் ஆசிரியை அகிலா (வயது 45) ஆகியோர் முட்டையுடன் மதிய உணவை சாப்பிட்டனர். பிற்பகல் 3.30 மணியளவில் மாணவர்கள் அனைவருக்கும் வயிற்றுவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதாம். ஆசிரியை அகிலாவுக்கும் இதே பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக 108 அவசர ஊர்தி மூலம் ஆசிரியை மற்றும் 8 மாணவ, மாணவிகள் மேல்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மாணவர்கள், ஆசிரியை ஆகியோரை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், மாவட்ட சத்துணவு அலுவலர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், ஆசிரியை, மாணவ, மாணவிகள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.