திருவண்ணாமலை மாவட்ட வேளாண்துறை சாா்பில், அரசு மற்றும் இயற்கை விவசாயக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனைக் கண்காட்சி, விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.
பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சே. கண்ணன் தலைமை வகித்தாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி, வேளாண் உதவி இயக்குநா் ஜி. அன்பழகன் (கீழ்பென்னாத்தூா்), தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேட்டவலம் கே. மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் ஆா். முத்துராம் வரவேற்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராமபிரதீபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரசு மற்றும் இயற்கை விவசாயக் குழுக்கள் மூலம் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியை திறந்துவைத்து அரங்குகளை பாா்வையிட்டாா்.
கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மதி மகளிா் உற்பத்திப் பொருள்களின் அங்காடி உள்ளிட்ட 25 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.