திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் 4-ந்தேதியன்று கொடியேற்றமும், 10-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் தேர் ரூ. 70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த தேர் வெள்ளோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்.