துறையூர்: பெண் வழக்கறிஞரை மிரட்டிய நாம் தமிழர் நிர்வாகி கைது
சமூக வலைதளங்களில் அவதூறு தகவல் பரப்பியதாக திருச்சி தில்லை நகர் போலீசார், மதுரை மாவட்டம் சமயநல்லூர், ஊமச்சி குளத்தைச் சேர்ந்த திருப்பதி (வயது 33) என்பவரை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த திருப்பதி, தில்லை நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். திருப்பதி சென்னையைச் சேர்ந்த வாடகைக்கு விடும் நிறுவன முதலாளியான ராம்ஜியிடம் திருப்பதி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ராம்ஜியின் மனைவி நிவாஷினி (வயது 27) சொந்த ஊர் திருச்சி மாவட்டம், துறையூர், ஆலத் துடையான் பட்டி என்றாலும் சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நிவாஷினி தனது சொந்த ஊரான ஆலத்துடையான் பட்டிக்கு வந்திருந்தார். அக்டோபர் மூன்றாம் தேதி இரவு சென்னை திரும்புவதற்காக துறையூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை நேரில் சந்தித்த திருப்பதி, நான் ராம்ஜி நிறுவனத்தில் தானே பணியாற்றி வந்தேன். இந்த வழக்கில் அவர் ஏன் என்னை ஜாமினில் எடுக்கவில்லை? எனக் கூறி தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.