ஆதரவற்றோர் இல்லம்; உதகை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில், ஆதரவற்றவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள் 33 பெண்கள் உள்பட 87 பேர் உள்ளனர். இந்த காப்பகத்திற்கு நகராட்சி மூலம் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டு வந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வசதி படைத்தவர்கள் சார்பாகவும் பொருளுதவி, பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடர்பாக புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உதகை கோட்டாட்சியர் மகாராஜா, நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி தலைமையிலான குழுவினர் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் இன்று காலை முதல் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் விளக்கங்களை கேட்டறிந்தனர். இதில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில் அப்துல்கலாம் ஆதரவற்றோர், இல்லம் நிர்வாகி தஸ்தகீரிடம் இருந்து மீட்கப்பட்டு உதகை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது உதகை நகர துணை கண்காணிப்பாளர் யசோதா தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.