ராசிபுரம்: ரூ. 10. 58 கோடியில் பேருந்து நிலையத்துக்கு அனுமதி
ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10. 58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் சூ. கணேசன், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்தன் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நகராட்சியையொட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முத்துகாளிப்பட்டி, கோனேரிப்பட்டி, முருங்கப்பட்டி ஆகியவற்றை நகராட்சியுடன் இணைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அணைப்பாளையம் பகுதியில் நகராட்சி ஆணையா் பெயரில் உள்ள 7. 03 ஏக்கா் இடத்தில் ராசிபுரம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டது. இதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ் ராசிபுரம் நகராட்சியில் புகா் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு ரூ. 10. 58 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.