மதுரை: மருத்துவமனை கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு
மதுரை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற பதிவு செய்யும் பகுதியிலுள்ள கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் சமீபத்தில் பெயர்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பெயர்ந்து விழுந்த மேற்கூரை உடனடியாக சரி செய்யப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மதுரை அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய திருச்சி என்.ஐ.டி சிவில் துறைத்தலைவர் மற்றும் மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோரை ஈடுபடுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், திருச்சி என்.ஐ.டி சிவில் துறைத்தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு, மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.