உடல் நலக்குறைவின் போதும் நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்
மதுரை மாநகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட திருமலை நகர் , பாண்டியன் நகர் , அடமந்தை ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து அப்பகுதி மக்களை பரிசல் மூலமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கால்வாய்களில் இருந்த குப்பைகள் செடிகளை அகற்றிய பின்பாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் அதிக அளவிற்கு சேதமடைந்த பகுதியான திருமலை நகர் பகுதியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதாவிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் மருத்துவ ஓய்வு கூட எடுக்காமல் மக்களுக்கான பிரச்சனையில் களத்தில் இறங்கி தனது உடல் நிலையை கூட பொறுட்படுத்தாமல் திருமால் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் சேறும் சகதியுமான தண்ணீரில் நனைந்தபடி சென்று ஆய்வு மேற்கொண்டார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் விரைவில் இந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படும் என கூறியதோடு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை கூடி முடிவெடுக்கவுள்ளனர். இதனையடுத்து பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தார்.