
செங்கையில் மொபைல் போன் டவரில் ஏறி ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ரேணுகா. இவர்கள், வீட்டின் வளாக பகுதியில் சுயதொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த ருக்மாங்கதன் என்பவருக்கும், குணசேகரன் குடும்பத்திற்கும் விவசாய நிலத்திற்கு வழிவிடும் விவகாரத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், குணசேகரன் கிராம நத்தம் நிலத்தில் கட்டடம் கட்டி தொழிற்சாலை நடத்தி வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் எனக் கூறி, ருக்மாங்கதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் இருந்த தொழிற்சாலையை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அகற்ற, வருவாய்த் துறையினர் சில நாட்களுக்கு முன் வந்தபோது, குணசேகரன் குடும்பத்தினர், ஒரு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை, மீண்டும் கட்டடத்தை இடிக்க வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், 'பொக்லைன்', ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அப்பகுதிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குணசேகரன் மற்றும் உறவினர் மகன்கள் மூன்று பேர், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் உள்ள 'மொபைல்போன் டவர்' மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள், பொதுமக்களும் வீட்டின் முன் அமர்ந்து மறியல் செய்தனர்.