செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சார் - பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2014 -- 15ல் நியாய விலை கடை கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் போதிய இடவசதியின்றி அமைக்கப்பட்டதால், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அரிசி பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளில் இருந்து, பொருட்களை இறக்கி வைத்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல், நியாய விலை கடை பயன்பாடு இல்லாமல், பூட்டியே வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரசு நிதியில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டடம், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, இந்த புதிய கட்டடத்தை மாற்று பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.