சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக, 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதி.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக, காலை நேரத்தில் தொடர்ந்து கடுமையான பனிமூட்டமும், பகலில் கடுமையான வெயிலுமாக, பருவநிலை மாறி மாறி இருந்து வருகிறது. இந்த கடுமையான பனிமூட்டம் காரணமாக, காலை நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதைப்போல் இன்று காலையிலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா, சூரத், விஜயவாடா, புவனேஸ்வர், அந்தமான் ஆகிய 10 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள், பனிமூட்டம் காரணமாக, சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக இதேப்போல் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். ஆனால் இன்று சென்னைக்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடும் அளவு பெரிய அளவில், பனி மூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.