
காஞ்சிபுரத்தில் தடுப்பணையை சூழ்ந்திருக்கும் புற்கள்
காஞ்சிபுரம் அடுத்த, வளத்துார் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மற்றும் கனகம்பாக்கம் ஏரி உபரி நீர் மற்றும் வயல்வெளிகளில் இருந்து வடிந்து செல்லும் தண்ணீர் லப்பைகண்டிகை கிராமத்தை ஒட்டி செல்லும் வரத்துக் கால்வாய் வழியாக அக்கமாபுரம் ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரி கால்வாய் குறுக்கே, ஆங்காங்கே, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஐந்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்பணைகள் முறையான பராமரிப்பு இன்றி, கோரைப் புற்கள் அதிகம் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால், தண்ணீர் செல்ல வாய்ப்பு குறைவாக இருக்கிறது என, விவசாயிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, தடுப்பணைகளை ஒட்டி, வளர்ந்துள்ள கோரைப் புற்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.