செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பிரதான தொழிலாகும்.
இதில், பருவ மழை காலங்களில், நெல் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி, எல். எண்டத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது.
அதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு தளம் அமைக்க, நபார்டு வங்கி நிதி உதவியுடன், 14. 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 5 மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், கடந்த பிப், 2024 ல் தொடங்கி, பணிகள் நடந்து வந்தன, பணிகள் முடிவுற்று, நிலையில் தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.