தர்மபுரி: இரும்பு பட்டைகளுடன் டிராக்டர் ஓட்டினால் நடவடிக்கை
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று(அக்.23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் கிராமச்சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு மற்றும் ஒன்றிய பொதுநிதி திட்டங்களின் மூலம் பல்வேறு தார் சாலைப் பணிகள் நடக்கிறது. தார் சாலைகளின் மீது இரும்பு பட்டைகளுடன் வாகனங்கள் இயக்குவது பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடியது ஆகும். மேலும், சட்டப்படி குற்றமாகும். எனவே இரும்பு பட்டைகளுடன் கூடிய டிராக்டர்கள் தார் சாலைகளில் பயன்படுத்துவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துளார்.