சென்னை: தீப ஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும்: ராமதாஸ்
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது. தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.