வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை நிறுத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தெளிவான வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையில் ராகுல் காந்தி வயநாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர், வேறொரு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதை மறைத்துவிட்டார். வயநாடு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு ராகுல் காந்திக்கு வாக்களித்தார்கள். ஆனால், அவர் வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் தகுதியுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அங்கு உள்ள போதிலும், பிரியங்கா காந்தியை கட்சி நிறுத்துகிறது. இதன் மூலம் அக்கட்சி வாரிசு அரசியல்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது.
பாஜக இளம் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளது. அவர் அந்த மண்ணின் மகள். சமீபத்தில் வயநாடு மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராகுல் காந்தி என்ன செய்தார்? பிரியங்கா காந்தியின் பங்களிப்புதான் என்ன? இதுபற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.