நாய் வளர்ப்புக்கான லைசன்ஸ் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நாய்களை வளர்க்கும் மக்களில் 80 முதல் 90 சதவீதம் கிராமப்புற ஏழை, நடுத்தர, விவசாய மக்கள் ஆவர். இவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒருவராக நாய்களை வளர்த்து வருகின்றனர். இதுதவிர, 10 சதவீத விகிதத்திற்கு கீழ் உள்ள பணக்காரர்களும் நாய்களை வளர்க்கின்றனர். எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குறிப்பாக அரசிடம் உதவிகள் பெறும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தற்போது அறிவித்துள்ள பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.
நாய்களை வளர்க்க விரும்பும் வருமான வரி கட்டக்கூடிய அனைவருக்கும் தமிழக அரசு தற்போது வகுத்துள்ள கட்டணங்களை பெறுவதில் தவறு இல்லை. மேலும், உரிமத்தின் காலம் முடிந்த பிறகு, ஒரு மாதத்துக்குள் அதை புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு ரூ. 500 அபராதம் என்பதை வருமான வரி செலுத்துவோருக்கு ரூ. 100 ஆகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 10 ஆகவும் புதுப்பிப்பு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.