
சென்னை: ஓய்வூதிய விவகாரத்தில் திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சி அமைத்து 44 மாதங்கள் கடந்த நிலையில் 'எது சிறந்த திட்டம்' என்று ஆராய குழு அமைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து, பொருளாதார வல்லுநர் குழு ஆரம்பித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் இதுபோன்றதொரு குழுவை அமைத்திருப்பது அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயல். முதல்வர் ஸ்டாலின் திமுக-வின் தேர்தல் அறிக்கையை நன்கு வாசித்து, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதனை அப்படியே 2003-க்கு பின் சேர்ந்தவர்களுக்கும் நடைமுறைப்படுத்த எந்தக் குழுவும் அவசியம் இல்லை என்பதால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.