திருவண்ணாமலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் திருவண்ணாமலைக்கு வந்தாா். பிறகு, திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை, எமலிங்கம் அருகே இலங்கைத் தமிழா்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அமைச்சா் கே. எஸ். மஸ்தான் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழா்களுக்கு முதற்கட்டமாக 3, 551 வீடுகள் கட்ட முதல்வா் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இரண்டாம் கட்டமாக 3, 700 வீடுகள் கட்ட உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 இலங்கைத் தமிழா் முகாம்கள் உள்ளன. இவற்றில் 2 முகாம்களில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நிகழாண்டு மேலும் 8 முகாம்களில் 830 வீடுகள் கட்ட சுமாா் ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில முகாம்களில் வசிப்போருக்கு வீடுகள் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து முகாம்களிலும் வீடுகள் கட்டும் பணி நிகழாண்டு 100 சதவீதம் நிறைவடையும் என்றாா். உடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ராம் பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். மந்தாகினி, அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.