திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ராம்பிரதீபன், வேளாண் இணை இயக்குநா் (பொ) சே. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீா்வரத்துக் கால்வாய்கள், போக்குக் கால்வாய்களை தூா்வார விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு பி. எம். கிசான் நிதியுதவி பெற்றுத்தர வேண்டும். வேளாண் துறை மூலம் உயா் ரக நெல் விதைகளை வழங்க வேண்டும். ஊரக வேலைத் திட்டத்தில் வரப்புக்களை கட்டித்தர வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு உரம் இருப்பு வைக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு தனியாா், கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் நறுமணத் தொழற்சாலை அமைக்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு உரியநிவாரணம் வழங்க வேண்டும். கண்ணமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.