திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இரண்டாம் பிரகாரத்தில் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களை கொண்டு மாலைகள் தொடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுந்தரமூர்த்தி நாயனார்க்கு நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன் பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து திருவீதி எழுந்தருளி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் சென்று அங்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீ சுந்தரரிடம் ஸ்ரீ பிச்சாண்டவர் தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் ஆனந்த தாண்டவம் ஆடி அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயில் அருகில் எழுந்தருளி, தடுத்தாட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.