
திருப்பூர்: செவிலியர்கள் பணிக்கு நேர்காணல் 10-ந் தேதி நடக்கிறது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற செவிலியர்கள் பணிக்கு நேர்காணல் 10-ந் தேதி நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை மாநகராட்சி நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நகர சுகாதார செவிலியர்கள் 6 பேரும், மருந்தாளுநர் 2 பேரும், ஆய்வக நுட்பநுணர் 6 பேரும், மருத்துவமனை பணியாளர் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வரும் 10-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வி சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ் அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம். முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.