நாடு முழுவதும் பொதுமக்களுக்கு காதியின் சார்பில் பல்வேறு நவீன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மும்பையில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் இன்று துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில், 200 பயனாளிகளுக்கு மின்சார மண்பாண்ட சக்கரம், 60 பேருக்கு பனை வெல்லம் தயாரிக்கும் இயந்திரம், எலக்ட்ரீசியன் பயன்படுத்தும் உபகரணங்கள், எண்ணெய் தயாரிக்கும் செக் இயந்திரம், செருப்பு தெய்க்கும் உபகரணங்கள், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இதில், காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் சித்தார்த்தன், தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இயந்திரங்கள் வழங்கினார்கள்.
மேலும், திருப்பூர் வித்தியாலயம் அருகில் கே. வி. ஓய் திட்டத்தின் பல லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காதி கடையை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் சுரேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.