தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கவும், கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது. இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி கொண்ட நிலத்தில் பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0. 5 ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை பரப்பளவில் தீவன சோளம் Co(FS)29 மற்றும் வேலி மசால் 3: 1 என்ற விகிதத்தில் பயிரிடுவதற்கு 0. 25 ஏக்கருக்கு ரூ. 1, 375/- முதல் ஒரு ஏக்கருக்கு ரூ. 5, 500/-வரை மானியமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த சேலம் மாவட்டத்திற்கு 150 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்ப்பாசன வசதி இல்லாத நிலத்தில் மானாவாரியாக பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0. 5 ஏக்கர் நிலத்தில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம் மற்றும் தீவன தட்டைபயிர் பயிரிடுவதற்கு 0. 5 ஏக்கருக்கு ரூ. 1, 500/- மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார்.