சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் முதல் மகன் கலையரசு, சிந்தாமணியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மாணவன் கலையரசு பள்ளிக்குச் சென்றுள்ளார் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து விடுமுறை எடுத்ததற்காக திட்டியுள்ளார். மேலும் எதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்தாய் எனக் கூறி தலையை பிடித்து சுவற்றில் அடித்து தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
தலையில் அடிபட்ட மாணவன் சிகிச்சைக்காக ஓமலூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவனின் தாய் பிரேமா கூறுகையில் எனது மகன் கலையரசனுக்கு ஒருவாரமாக உடல் நிலை சரியில்லை அதனால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். இன்று பள்ளிக்கு சென்ற மகனை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தையில் பேசி அடித்துள்ளார். அவர் மீது மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.