தென்காசி: புத்தகத் திருவிழா; லோகோ வெளியிட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டத்தில் 15. 11. 2024 முதல் 24. 11. 2024 வரை தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள 3 வது பொதிகை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பொதிகை புத்தகத் திருவிழாவின் லோகோவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் நேற்று வெளியிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், இ. ஆ. ப. தெரிவித்ததாவது;- தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக் கண்காட்சிகள் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி புத்தக கண்காட்சியினை நவம்பர் 15 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5. 00 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்ற உள்ளனர். மேற்படி, இவ்விழாவில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர். தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லார். ஆலங்குளம் கடையநல்லூர் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். புத்தக கண்காட்சியில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தெரிவித்தார்.