
தென்காசி: பாவூர்சத்திரம் அரசு பள்ளியை பராமரித்திட கோரிக்கை
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலருமான இராம. உதய சூரியன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேற்று நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாவூர்சத்திரத்தில் 75 ஆண்டு கால பழமையான தி.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த வட்டாரத்தில் பலரும் கல்வியில் உயருவதற்கு இந்தப் பள்ளியே காரணமாகும். பல வரலாறு கொண்ட இந்தப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் தற்போது மிகவும் பழுதடைந்து மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ளது. மேலும் கல்வி பயிலுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் குறைவாக உள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருக்கின்ற வகுப்பறைகளும் சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. பாவூர்சத்திரத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கத்தின்போது இப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வகையில் இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1 கோடியே 16 இலட்சமும் இப்பள்ளியின் பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படாமல் அரசு கணக்கிற்கு செலுத்தப்பட்டு விட்டது. எனவே பள்ளியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.