சேலம் புது பஸ்ஸ்டேண்டில் போலீஸை செருப்பால் அடித்த 3 பேர் கைது
தீபாவளி பண்டிகை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பிய மக்களால் நேற்று இரவு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் கூட்ட நெரிசலால் திக்கு முக்காடியது. அங்கு பள்ளப்பட்டி போலீசார் உட்பட மாநகர போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு சூரமங்கலம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கு 43, அவரின் உறவினர் கமலேஸ்வரி 35. ஹரிகிருஷ்ணன், 28. ஆகியோர் புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் வெளியேறும் நுழைவு பாதை வழியாக காரை பஸ் ஸ்டாண்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த எஸ். எஸ். ஐ. , சரவணவேலன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். இதனால் போலீஸாருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கமலேஸ்வரி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி எஸ். எஸ். ஐ சரவணவேலனை சரமாரியாக அடித்துள்ளார். அதனை தடுக்க சென்ற போலீசாருக்கும் அடி விழுந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கமலேஸ்வரி சாலையில் படுத்து உருண்டு ரகளை செய்தார். அதையடுத்து காரில் வந்த மூன்று பேரையும் போலீசார் குண்டு கட்டாக போலீஸ் ஸ்டேசனுக்கு தூக்கி சென்றனர். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் ஐ சரவணவேலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.