சேலம் இரும்பாலை மோகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் கார்த்திக்ராஜன் (வயது27). நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஜவுளி எடுக்க சேலம் வந்தார். அதன்பிறகு இரவு 10 மணியளவில் சேலம் மெய்யனூர் 5 தியேட்டர் அருகில் செல்லும்போது, அரசு விரைவு பஸ் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கீழே விழுந்தார் அவர் மீது பஸ் சக்கரம் ஏறி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் கார்த்திக்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (21). இவர், நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் நெய்காரப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் பட்டர் பிளை பாலம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த வாகனம், கதிரவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.