தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகும் சரபங்கா நதி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி வழியாக தேவூர் வருகிறது. தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் நிரம்பி வழிந்து அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் 6 மாத காலத்திற்கு தண்ணீர் நிரம்பி பாய்ந்து ஓடும். இதனால் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தேவூர், மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமாச்சிபாளையம் சுற்றுவட்டார கிராம பகுதி இளைஞர்கள், பெண்கள் என திரளான மக்கள் குளியல் போட்டு மகிழ்வது, துணி துவைப்பது, தண்ணீரில் விளையாடுவது என பொழுதை போக்குவதும் வழக்கம். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சேர்வராயன் மலை மற்றும் சரபங்கா நதி கரையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. தண்ணீர் பாய்ந்து செல்லும் அழகை கண்டு ரசிக்க அந்த பகுதிக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் தேவூர் சரபங்காநதி பகுதி சுற்றுலா தலம் போன்று களை கட்டி உள்ளது.