எடப்பாடி: தலைவர் பாஷா தலைமையில் நடந்த நகராட்சி கூட்டம்
எடப்பாடி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் டி. எஸ். எம். பாஷா தலைமையில் நடந்தது. ஆணையாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய அ. தி. மு. க. உறுப்பினர் ராம்குமார், எடப்பாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடைநீர் கலந்து வருவதாகவும், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர், ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சாலையோர வியாபாரிகள் நலன் காக்கும் சிறப்பு குழு அமைப்பது குறித்து கவுன்சிலர்கள் பேசியதற்கு பதில் அளித்து ஆணையாளர் பேசுகையில், 800-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு வியாபார உதவியாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகளின் நலன் காக்கும் வகையில் வியாபாரிகள் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்கு இடையே புதிய சாலைகள் அமைத்தல், கழிவுநீர் அமைப்புகள், குடிநீர் தொட்டிகள், தெருவிளக்கு உள்ளிட்ட 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.