சிவகங்கை: மீன் குஞ்சுகள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் கிராமப் புற நீா்நிலைகளில் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு: கிராமப்புற மக்களுக்கு மீன் புரதச் சத்து எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்ய ஏதுவாக, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் மீன் வளம், மீனவா் நலத் துறை மூலம் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சிவகங்கை மாவட்டத்துக்கு 90 ஹெக்டோ் பரப்பளவில் ஊராட்சி குளங்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒரு ஹெக்டேருக்கு 2000 வீதம் மொத்தம் 90 ஹெக்டேருக்கு 1. 80 லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பில் வைத்து, மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.