குன்னுார்: தேயிலை ஏலத்தில் தொடர் வீழ்ச்சி!
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் தேயிலை ஏல மையத்திலும், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளின் தேயிலை துாள் டீசர்வ் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தேயிலை ஏலங்கள் கடந்த, 4 வாரங்களாக தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. ஏறுமுகமாக இருந்த விலை, சரிந்து வருவதுடன், வரத்தும், விற்பனையும் குறைந்து வருகிறது. குன்னுார் ஏல மையத்தில் நடந்த, 44வது ஏலத்திற்கு 18. 52 லட்சம் இலை ரகம் 5. 11 லட்சம் டஸ்ட் ரகம் என மொத்தம் 23. 62 லட்சம் கிலோ வந்தது. மொத்தம் 16. 73 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு 143. 17 ரூபாய் என இருந்தது. இலை ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் 132. 82 ரூபாய், சி. டி. சி 144. 72 ரூபாய் எனவும், டஸ்ட் ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் 132. 73 ரூபாய், சி. டி. சி 138. 01 ரூபாய் எனவும் இருந்தது. சில குறிப்பிட்ட இலை ரகங்களுக்கு 146. 96 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்தது. 70. 81 சதவீதம் விற்பனையாகி 29. 19 சதவீதம் தேக்கம் அடைந்தது. மொத்த வருமானம் 23. 96 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட 3. 68 கோடி ரூபாய் குறைந்தது, 41வது ஏலத்தை ஒப்பிடுகையில், 9. 68 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது.