ஊட்டி: கேரட் விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி
கேரட் கொள்முதல் விலை 100 முதல் 110 வரை உயர்வு காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 100 முதல் 110 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் கேரட் அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். நீலகிரி மலைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலேய காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்றவை ஆகும். பசுந்தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஊட்டிக் கேரட்டுக்கு நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருவதால், பெரும்பாலான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளன. இந்நிலையில், தற்போது கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட கேரட்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள கேரட்டுக்கு ரூபாய் 100 முதல் 110 வரை விலை கிடைக்கிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட்டின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.