நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக லேசான மழையுடன் கூடிய அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழையுடன் கூடிய அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அதிகாலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெண்மேகம் கூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதையில் காலை முதல் கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மலைப்பாதையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்.
கடுமையான மேகமூட்டத்தால் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெண்மை நிறமாக காட்சியளித்தது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.