உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் டயர் வெடித்து இருசக்கர வாகனதின் மீது மோதி வீட்டின் மீது பறந்து சென்று விழுந்த விபத்துக்குள்ளான காரால் பரபரப்பு. காரில் பயணித்த தாயும் மகனும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் பணிபுரியும் நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரில் பணிபுரிந்து வரும் குன்னூரை சேர்ந்த லெனின் என்பவர் தனது தாயுடன் பெங்களூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு உதகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது கார் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதிக்கு வந்த போது காரின் முன் சக்கர டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த பைக் மீது மோதி பின்னர் அருகில் இருந்த வீட்டின் கூரை மீது பறந்து சென்று விழுந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பகுதி மக்கள் காரில் இருந்த லெனின் மற்றும் அவரது தாயை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த நிலையில் காரை கிரேன் மூலம் மீட்டு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.