குமரி மாவட்ட கலெக்டரிடம் கவுன்சிலர் மனு.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டரிடம் பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் மனு ஒன்று அளித்தார். அதில், பகவதியம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் போது புனிதநீர் எடுப்பதற்காகவும், பரிவேட்டை ஊர்வலத்தின் போதும் யானையை அறநிலைதுறை சார்பில் பயன்படுத்து வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு யானையை வரவழைக் காததால் பக்தர்கள் மத்தியில் பெரும் மனக்குறை ஏற்பட்டது. எனவே, அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி முதல் தொடங்கும் நவராத்திரி திருவிழாவில் யானையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள 16 கால் கல்மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது. - கல்மண்டபத்தை ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும். -மேலும், காந்தி மண்டபத்தில் இருந்து முக்கடல் சங்கமத்திற்கு வரும் பாதையை போலீசாரும், அறநிலையதுறையும் இணைந்து இரும்பு கேட் அமைத்து சங்கிலியால் பூட்டி வைத்துள்ளனர். இதனால் தீ அணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை வர முடியாத நிலை இருந்து வருகிறது. நவம்பர் முதல் சீசன் காலம் தொடங்குவதால் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, இதனை கருத்தில் கொண்டு பொதுநலன் கருதி கேட்டை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.