
குழித்துறை: பாலியல் புகார்; பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
குழித்துறை அருகே உள்ள பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர். இது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த ஆசிரியர் தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாகவும் தன்னை மன்னித்து பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு முறையிட்டார். இதையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் ஒழுங்காக நடந்து கொண்ட ஆசிரியர் நாளடைவில் மீண்டும் தனது லீலைகளை தொடங்கி உள்ளார். இது குறித்து மீண்டும் மாணவர்கள் புகார் கூறினர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதை அடுத்து அந்த ஆசிரியர் இரண்டாவது முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.