எட்டாமடை: அதிகாலையில் சாலையில் சுற்றித்திரிந்த கரடி
குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதிகளில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் வனத்தில் இருந்து அவ்வப்போது யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று (6-ம் தேதி) அதிகாலை எட்டாமடை பகுதியில் சாலையில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. கரடியை பார்த்ததும் நாய்கள் குரைத்ததால் அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, சாலையில் கரடி சுற்றித் திரிந்து கொண்டிருந்ததை கண்டு கதவுகளை அடைத்துள்ளனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கரடி சாலையில் செல்வது பதிவாகி இருந்தது. கரடியை தேடி வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.