பூத்துறை கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

71பார்த்தது
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அரிய வகை மணல் ஆலை உள்ளது.

இந்த ஆலையில், கடல் மணலில் இருந்து மோனோ சைட், இலுமினேட், ரூட்டைல், சிர்கான், கார்னெட் ஆகிய அரிய வகை கனிமங்களை பிரித்து எடுத்து மின்னணு சாதனங்கள், மருத்துவக் கருவிகள், விமான உதிரி பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆலையை குமரி மாவட்டத்தில் மேலும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1, 144 எக்டேர் நிலப்பரப்புகளில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான அனுமதியை இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கி உள்ளது.

இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரும் அக்டோபர் 1ம் தேதி தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இந்த தகவல் மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கனிமங்கள் பிரித்து எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூத்துறை கிராம மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இன்று (22-ம் தேதி) மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.