யானை நடமாட்டம் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனசரகத்திற் குட்பட்ட பிக்கனஅள்ளி காப்புகாட்டை ஒட்டியுள்ள வெள்ளிசந்தை, கருக்கன அள்ளி, அண்ணாமலை அள்ளி, தண்டுகாரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். பிக்கன அள்ளி காப்பு காடு பகுதியில் யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் காப்புகாட்டையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சவோ, காவலுக்கோ, செல்ல வேண்டாம். மேலும் அருகில் உள்ள காப்புகாட்டிற்கு செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார துறைக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 இன்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.