தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 60, 100, 200, 400, 600, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தடகள விளையாட்டுப் போட்டிகளில் 350 ஆண்களும், 200 பெண்களும் என மொத்தம் 550 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட தடகள சங்க தலைவர் டி. எஸ். சரவணன் தலைமை தாங்கி, தடகள சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். தேசிய கொடியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஏற்றி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த தடகள விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் வருகிற 20-ம் தேதி முதல் ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.